An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Sunday, August 24, 2014

உழைப்பும், சேமிப்பின் அளவும்

No comments :
சமீபத்தில் பேருந்தில் உட்கார்ந்து மனப்பாடம் செய்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை பார்த்த நண்பர் (Yeseyeweyea Raman) ஒருவர் தனது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். எதற்காகப்  படிக்கிறோம் என்றே தெரியாமல் படிக்கிற மாணவர் சமூகத்தை பற்றிய மிக சுவராஸ்யமான பதிவு அது.



இந்த மாணவர்கள் எதற்குப் படிக்கிறோம் என்று தெரியாமல் படிப்பது போல, எதற்கு உழைக்கிறோம் என்று அறியாமல் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை  இயந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் நிறைய சந்திக்கிறேன். நின்று யோசிக்கக் கூட நேரமின்றி இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வேலை, தேவைக்குமீறிய சேமிப்பு, போலித்தனமான பொழுதுபோக்கு  என்று அவர்களது உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இயந்திர உலகம் நிகழ்த்தும் போட்டியில், வெற்றியைப் பறிக்க வேகமாக ஓடி ஓடி இயந்திர மனிதனாகவே (Mechanical Man) மாறிக் கொண்டிருக்கின்றான்.

சில நேரங்களில் நின்று யோசிக்க தருணமின்றி "உழைத்து சேமிக்க"   ஓடுவதாலேயே, எதற்காக ஓட ஆரம்பித்தோம் என்று மறந்துவிட்டோம் போலும். ஆதியில் மனிதன் எதற்காக உழைக்க ஆரம்பித்தான், சேமிப்பு என்ற சொல் எதற்காக வழக்கில் வந்தது என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

முன்னொரு காலத்தில் மனிதன் தனக்கு தேவையான உணவுப் பொருளை இயற்கையிடம் இருந்து எடுத்துக்கொண்டான். பழங்கள், காய்கறிகள் மற்றும் தன்னுடன் வாழ்ந்த மற்ற உயிரினங்களின் இறைச்சிகள் என அனைத்தும் இயற்கையே அவனுக்கு தந்து வந்தது.

சேமிப்பு என்ற ஒரு சொல் வழக்குக்கு வராத காலம் அது. மனிதர்களும் மற்ற உயிரங்களைப் போல அன்றைய தேவையைக் கருதி வாழ்ந்த காலம் அது. இயற்கையை பற்றிய அவனது புரிதல் அதிகமான பின்பு, ஓடியாடி இறை தேடாமல் நீரை வசப்படுத்தி தனக்கு தேவையானவற்றை தானே பயிர் செய்து உண்டு வாழ்ந்தான். தனது அன்றைய தேவைக்கு மேல் (excessive production) அவன் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது சேமிப்பு தேவையாகி போனது. உற்பத்தி செய்த உணவுப்பொருளை சேமித்து வைத்து தேவையான போது செலவிட்டு வந்த மனிதன், குடும்ப வாழ்க்கை முறையையும் பின்பற்ற ஆரம்பித்தான். சேமிப்பு, பஞ்ச காலத்தில் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் உதவியது.



Image courtesy: Pixabay.com

இயற்கை விதிகளின் படி 


உணவுப்பொருளை சேமித்த வரையில் இயற்கை அவனுக்கு ஒரு அளவு (limit) விதித்து இருந்தது. அளவிற்கு மீறி உணவுப்பொருளை சேமிக்க முடியாது, சேமித்தாலும் கெட்டு போகும் என்ற நிலை அது.

பல குடும்பங்கள் சேர்ந்து சமூகமாக (society) வாழ ஆரம்பித்த போது, பரிமாற்றம் என்ற பெயரில் தன்னிடம் இல்லாத பொருளை பெற, தன்னிடம் அதிகமாக இருக்கும் பொருளைக் கொடுத்து மாற்றிக்கொண்டான் (பண்டமாற்று முறை). நீண்டகாலமாக, பரிமாற்றம் (exchange) பொருட்களை கொண்டே நடந்தேறி வந்தது.  ஒவ்வொரு சமூகமும் உணவில் தன்னிறைவு (self-sufficiency) அடைந்து இருந்த காலம். பணம்/நாணயம் (currency) என்ற ஒன்று கண்டுபிடிக்கபடாத காலம் அது.

ஒரு மூட்டை அரிசிக்கு பதில் ஒரு மூட்டை கோதுமை என்ற போது பிரச்சினயின்றி நடந்த வர்த்தகப் பரிமாற்றம், ஒரு  மூட்டை அரிசிக்கு பதில், ஒரு பசுமாடு என்ற போது திகைத்துப்போனது. அரிசியை சிறு சிறு அளவுகளில் பிரித்து விற்கலாம். ஆனால், பசுமாட்டை எவ்வாறு பிரித்து விற்பது?

இப்பிரச்சினையை தீர்க்க பணம்/தங்க நாணயம் (currency) என்ற ஒன்று உருவானது. இதன் படி, அரிசி விற்பவனும், பசுமாடு விற்பவனும் முதலில் அதை விற்று அதற்க்கு ஈடான பணத்தினை (currency) பெற வேண்டும். பின்பு பணத்தினை கொண்டு அவனுக்கு தேவையான பொருளை வாங்கி கொள்ளவேண்டும், மீதி பணத்தை சேமித்து கொள்ளலாம்.

இயற்கையை மீறி 

பணத்தின் கண்டுபிடிப்பு மனித வாழ்வில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதாவது, இயற்கையால் வகுக்கப்பட்ட சேமிப்பின் அளவை பணம் என்ற மாற்றுப்பொருள் கொண்டு உயர்த்தி கொள்ளலாம். மேலும், “பணம்” உணவுப்பொருள் போன்று கெட்டு போகாது. முதன்முதலாக, மனிதன் கெட்டுபோகாத ஒரு பொருளை சேமிக்க ஆரம்பித்தான். உழைப்பு பொருளானது, பொருள் விற்கப்பட்டு பணமானது, பணம் மற்ற பொருட்களை வாங்கும் சக்தியை தந்தது. இந்த சுழற்சி மனிதன் பணத்தினை தன் தேவைக்கு மீறி சேர்க்க உதவியது.

இயற்கை விதித்த அளவை மீறி சேமிக்க ஆரம்பித்த மனிதனுக்கு நாளைடைவில், “அளவு” (limit) என்பதே மறந்துபோனது. சேமிப்பின் அளவை மறந்ததினால் எங்கே நிறுத்த வேண்டும் என்பதையும் மறந்து போனான். முதல் நிலையில் சேமிப்பு என்பது அவனுக்கும், குடும்பத்திற்கும் உதவியது, இரண்டாம் நிலையில் சேமிப்பு தனக்கு பின் இருக்கும் சந்ததிக்கு உதவியது.

இன்றைய நிலையில் சேமிப்பு என்ற சொல்லுக்கு ஒரு எல்லை வகுக்கப்படாததால், நாளைய தேவைக்காக சேமிக்கிறேன் என்று இன்றைய வாழ்வினை வாழ மறந்துவிட்டான். போதும் என்ற சொல்லை மறந்து, மேலும் வேண்டும் என்ற எண்ணம் மனிதனிடையே மேலோங்கிய காரணத்தினால்,  தான் வாழ்வதற்க்கான தேவையை தாண்டி எதற்காக உழைக்கிறோம் என்கிற எண்ணமேதுமில்லாமல் உழைக்க தொடங்கிவிட்டான்.

"எதற்காக உழைக்கிறோம்? எங்கு நிறுத்தப் போகிறோம்? எப்போது குடும்பத்திற்கும், தனக்காகவும் நேரம் ஒதுக்கப் போகிறோம்?", என்ற கேள்விகளுக்கு "நின்று" விடை தேடலாம் வாருங்கள்.

(தொடரும்) 

No comments :