An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Sunday, May 22, 2016

தேவை அரசியல் விழிப்புணர்வு மட்டுமே

No comments :
2016 தேர்தல் முடிவுகள், அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் எவருக்கும் எந்த ஒரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்காது என்றே நினைக்கிறேன். ஊழலில் திளைத்து கரை கண்ட இரு அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். மாற்றத்தை முன்வைத்து களம் கண்ட கட்சிகள் அனைத்தும் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. 

நமது தேர்தல் முறையில் இருக்கும் குறையின் காரணமாக தொகுதிகளை தாண்டி லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கை பெற்றும் பாமக, மநகூ மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் சட்டமன்றத்தில் பங்கெடுக்க முடியாத நிலை. சட்டமன்றம் செல்ல குறைந்தபட்சம் ஒரு தொகுதியலாவது மக்களின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்கிற நிலையில், "மாற்றம்" என்கிற முழக்கத்தை மட்டுமே வைத்து வாக்குகளை திரட்டி பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற முடியுமா?



1967-ல் திராவிட கட்சி வலுப்பெற்று ஆட்சி அமைக்க காரணம் அவர்கள் முன்வைத்த கொள்கை சார்ந்த அரசியலே அன்றி வெறும் மாற்று என்கிற முழக்கமாக இருக்க முடியாது. திராவிட கட்சிகளின் ஆட்சியின் பலனாக, தமிழகம் சில துறைகளில் முன்னேற்றம் கண்டாலும், இன்றைய நிலையில் அந்த கட்சிகளுக்கான அரசியல் தேவை மிகவும் குறைந்து விட்டது என்றே தோன்றுகிறது. இருந்தும், இன்றைக்கு களத்தில் நின்ற கட்சிகள் பெரும்பாலும் மாற்றம் என்ற முழக்கத்தை மட்டுமே முன்வைத்து (கொள்கை என்ற அடித்தளமின்றி), சொற்ப வாக்குகளை பெற்று ஓய்ந்திருக்கின்றன.

வெறும் மாற்றம் என்ற முழக்கம் மக்களை ஒன்று திரட்ட உதவாது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்க முடியாது. மேலும், மாற்றத்தை முன்வைத்த கட்சிகள் மக்களின் வாக்கை பிரித்து இயல்பாகவே அதிக வாக்கு வங்கி இருக்கும் கட்சியின் வெற்றிக்கு உதவியதில் நமது தேர்தல் முறையில் இருக்கும் குறையை மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

மக்களுக்கு எது அரசியல் என்று அறிவுறுத்தாமல், வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே கச்சிதமாக தேர்ந்து, இரு பெரும் கட்சிகளும் அரசியல் நடத்தி, வெற்றியும் கண்டிருக்கின்றன. வெறும் இலவசங்களையும், பணத்தையும் அள்ளி வீசி வாக்கு வங்கியை தக்க வைத்து, வாக்குகளை ஈர்க்க முடியும் என்றால், கொள்கை தேவை இல்லை என்ற முடிவை எடுத்திருக்கின்றன போலும்.

நீண்ட கால வளர்ச்சியை மறந்து, குறுகிய கால தேவையை கருத்தில் கொண்டு அரசியல் விழிப்புணர்வு இல்லாத மக்களால் (பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும்?) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவே இது இருக்கிறது. இந்த அரசும், தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள மேலும் இலவசங்களையும், குறுகிய கால பயன் தரும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பொது மக்களின் வாக்கை பெற்ற எந்த ஒரு கட்சியும் தோல்வியடையவில்லை; கணிசமான வாக்கை பெற்றும், அவர்கள் சட்டமன்றத்தில் பங்கெடுக்க முடியாது என்பது சிறிது அபத்தமாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்று இப்போதிருக்கும் தேர்தல் முறையிலேயே சட்டமன்றம் செல்ல, மக்களை கொள்கை ரீதியான அரசியலை முன்வைத்து மட்டுமே ஒன்று திரட்ட முடியும் என்று தோன்றுகிறது.

குறைந்த வாக்குகளை மட்டுமே பெற முடிந்த கட்சிகள் சிறந்த எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு, அடுத்த தேர்தல் வரை இருக்கும் நேரத்தை பொறுப்பாக பயன்படுத்தி, மக்களுக்கு கொள்கை ரீதியான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், சில வருடமே உபயோகமாகும் அலைபேசி அரசியலை மட்டுமே தமிழகம் முன்னெடுத்து செல்லும்.

No comments :