Wednesday, August 3, 2016
ஜப்பான்
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, இரண்டு அணுகுண்டுகளை இதயத்தில் வாங்கிய தேசம். ஹிரோஷிமா, நாகசாகி என இரு நகரங்கள் முற்றிலும் அழிந்த போதும், மீண்டு எழுந்த தேசம். அறிவியலில் சீரிய முன்னேற்றம் கண்ட தேசம். மிகச் சுறுசுறுப்பான மக்கள் வாழும் தேசம். மக்களின் சராசரி வயதுப்படி, உலகில் மூன்றாவது அதிக முதியவர்கள் வாழும் தேசம்.
இந்த சிறிய தேசமான ஜப்பானில் தான், பல தலைமுறைகளை கடந்து பல தொழில்கள் நடந்து வருகின்றன. 2008-ம் ஆண்டு பேங்க் ஆப் கொரியா நடத்திய ஆய்வின் படி, உலகில் 200 ஆண்டுகளை கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 5,586. இதில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 3,146!
இதைத் தொடர்ந்து 2012-ல், டோக்யோ ஷோக்கோ (Tokyo Shoko) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, 100 வயதைக் கடந்த ஜப்பான் நிறுவனகளின் எண்ணிக்கை 21,000-க்கும் மேல்!
“கோங்கோ கூமி” (Kongō Gumi) என்ற கட்டுமானத் துறையை சேர்ந்த நிறுவனம் கிபி 578-ஆம் வருடம் தொடங்கப்பட்டது. 40 தலைமுறைகளை கடந்து நடந்து வந்த இந்த நிறுவனம், 2006-ஆம் ஆண்டில் (1428 ஆண்டுகளுக்குப் பிறகு) தகமட்சு (Takamatsu) என்ற நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. “கோங்கோ கூமி” (Kongō Gumi) தான் உலகின் மிகப் பழமையான நிறுவனம்.
ஜப்பானில் தான் 100 வயதைக் கடந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள். அதிக வயதானவர்கள் மட்டுமல்ல, அதிக வயதான நிறுவனங்களும் இருக்கும் தேசம், ஜப்பான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment