An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Sunday, July 16, 2017

என். சொக்கனின் "மொஸாட்" - ஓர் அறிமுகம்

No comments :
தஞ்சையில் இருந்து காரில் சென்னை திரும்புகையில், திண்டிவனம் அருகே ஒரு உணவக வாசலில் பெரிய புத்தகக் கடை போட்டிருந்தார்கள். நிறையப் புத்தகங்களின் நடுவே, ஒரு புத்தகம் மட்டும் என்னை, என் கவனத்தை ஈர்த்தது. சற்றும் யோசிக்காமல் என். சொக்கனின் "மொஸாட்" புத்தகத்தை வாங்கினேன்.

இரண்டு நாட்கள் கழித்து சிங்கப்பூர் விமானத்தில் ஏறியவுடன் இந்த புத்தகத்தை தான் கையில் எடுத்தேன். 'Munich' திரைப்படத்தை பார்த்ததில் இருந்தே மொஸாட் பற்றி படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அப்படியான சாகசங்கள் நிறைந்த படம். புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு தான் வாங்கினேன். தலைப்பினால் ஈர்க்கப்பட்டு பல புத்தங்களை வாங்கி ஏமாந்து போய் இருக்கிறேன். இதுவும் அது போன்று ஒரு புத்தமாகி விடுமோ என்று முதலில் தயக்கம் தான். ஆனால், கையில் எடுத்த இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தாகிவிட்டது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை படித்த ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என். சொக்கன். புத்தகம் முழுதும் எளிய வார்த்தைகள் கொண்டதாகவும், 'நடை' படிப்பதற்கு இலகுவாகவும் இருப்பது சிறப்பு. அடுத்தது என்ன என்ற தேடலையும் நமக்குள் உருவாக்குவது மிகச் சிறப்பு.

என்னைப்  பொறுத்தவரை,  வரலாற்றை சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில் முக்கிய சிக்கல் அதனினூடே எழுத்தின் வலிமையை சேர்ப்பதில் தான் இருக்கிறது. தனது மொழியில் அதை வெகு இலகுவாக கையாண்டிருக்கிறார் 'சொக்கன்'; மேலும் அந்த மொழிநடை மூலம் படிக்கும் நம்மை மேலும் ஆர்வம் கொள்ளவும் செய்கிறார். உதாரணத்திற்கு, பதுங்கிய புலி என்ற கட்டுரையின் முடிவை,

"மொஸாட் புலி, தன்னுடைய அவமானக் காயங்களை நக்கிக் கொண்டது. முன்பை விட அதிக வெறியுடன் பாயத் தயாரானது!"

என்று பதிந்திருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் தான் இந்தப் புத்தகத்தை வேகமாக படிக்கவும், கீழே வைக்காமல் முடித்துவிடவும் தூண்டுகிறது. இன்னோர் இடத்தில், மொஸாடின் சாமர்த்தியத்தை, இப்படி எழுதியிருக்கிறார்.

"மொஸாடின் சாமர்த்தியம், அவர்கள் ஒருவரைப் பின்தொடர்கிறார்கள் என்றால், அது அவருடைய நிழலுக்குக்கூடத் தெரியாது"

ஆங்காங்கே, "டொனோவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான், 'அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்டா, மவனே'" என்று நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறார். எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியாமல் படித்த புத்தகங்கள் மிகவும் குறைவு. இது போன்ற புத்தங்கள் இருந்தால் ஒரு 'Subject'-ஐ எளிதில் அணுகித் தெரிந்துக் கொள்ளலாம். அதற்காகவே என். சொக்கனின் 'மொஸாட்' திரும்பத் திரும்ப படிக்கலாம்.

No comments :